Friday, 23 August 2013

வாழ்க்கைப் பயணம்

அமெரிக்க தொழிலதிபரான ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்தார். அப்போதும் ஏதோ வேலையாக இருந்தவரைக் கண்டு அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார். அவர், ''ஐயா, இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்... நிம்மதியாக சாப்பிட்டு, ஓய்வெடுக்கலாமே?!'' என்று ராக்ஃபெல்லரிடம் கேட்டார்.

உடனே ராக்ஃபெல்லர், ''விமானி இந்த விமானத்தை இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்து விட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. அதற்காக... இப்போது எஞ்ஜினை அணைத்துவிட முடியுமா? எஞ்ஜினை அணைத்துவிட்டால் என்னவாகும் தெரியுமா?'' என்று கேட்டார்.

''பெரும் விபத்து நேருமே!''- பதற்றத்துடன் பதிலளித்தான் இளைஞன்.

இதைக் கேட்டுப் புன்னகைத்த ராக்ஃபெல்லர், ''வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான். கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டியுள்ளது. வந்த பிறகு, 'உயரத்தைத் தொட்டு விட்டோமே...' என்று உழைப்பதை நிறுத்தி விட்டால், தொழிலில் விபத்து ஏற்பட்டு விடும். உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்!'' என்று விளக்கம் அளித்தார்.

Wednesday, 21 August 2013

தெனாலி ராமன் நீதிக் கதைகள் - திருடர்கள்

ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன். 

இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், "அடியே, நம் நாட்டில் பருவ மழை தவறிவிட்டதால், பஞ்சம் ஏற்பட்டு விட்டது. எனவே நிறைய திருட்டு நடக்க ஆரம்பித்து விட்டது. பஞ்ச காலம் முடியும் வரை நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எனவே நாம் ஒரு காரியம் செய்வோம்" என்று வெளியே பதுங்கியிருந்த திருடர்களுக்கு கேட்கும் வண்ணம் உரத்த குரலில் பேசினான். 

"அதற்கு என்ன செய்யலாம்?" என்று தெனாலிராமனின் மனைவி கேட்டாள். 

"வீட்டிலுள்ள நகை, மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இந்தப் பெட்டியில் போட்டு பூட்டு. நாம் இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டு விடலாம். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும் மீண்டும் கிணற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்" என்று முன்போலவே உரக்கக் கூறினான் தெனாலிராமன். திருடர்களும் இதைக் கேட்டனர். 

அதே சமயம் ரகசியமாக தெனாலிராமன் தன் மனைவியிடம் திருடர்கள் ஒளிந்திருப்பதைக் கூறி ஒரு பழைய பெட்டியில் கல், மண், பழைய பொருட்களை எல்லாம் போட்டு மூடினான். அந்தப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து கிணற்றுக்குள் 'தொப்'பென்று போட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டான் தெனாலிராமன். 

திருடர்களும், "தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து திருடும் நம் வேலையை சுலபமாக்கிவிட்டான். நாம் எளிதாக கிணற்றிலிருந்து பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட்னர். 

பெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடன் ஒருவன், "அண்ணே! தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம் நால்வரும் ஏற்றம் மூலம் மாற்றி மாற்றி நீரை இறைத்து விட்டால் சுலபமாகப் பெட்டியை எடுத்துக் கொண்டு போகலாம்" என்று கூறினான். அதைக்கேட்ட மற்றவர்களும் அவன் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டனர். அதன்படி ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்றம் மூலம் நீர் இறைக்கத் தொடங்கினர். 

சற்று நேரம் கழித்து வேறு வழியாக தோட்டத்திற்கு சென்ற தெனாலிராமன், திருடர்கள் இறைத்து ஊற்றிய நீரை தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும், கொடிகளுக்கும், பயிர்களுக்கும் பாயுமாறு கால்வாயைத் திருப்பி விட்டான். 

இப்படியே பொழுது விடிந்தது விட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை. இதனால் திருடர்களும், "நாளை இரவு மீண்டும் வந்து நீரை இறைத்து விட்டு பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று பேசிக் கொண்டு சென்றனர். 

அப்போது தோட்டத்திலிருந்து வந்த தெனாலிராமன் அவர்களைப் பார்த்து, "நாளைக்கு வரவேண்டாம். நீங்கள் இறைத்த தண்ணீர் இன்னும் மூன்று தினங்களுக்குப் போதும். எனவே மூன்று தினங்கள் கழித்து வந்தால் போதும். உங்கள் உதவிக்கு நன்றி நண்பர்களே!" என்று கூறினான். 

திருடர்களுக்கு இதைக் கேட்டதும் மிகவும் அவமானமாய் போய்விட்டது. தங்களை ஏமாற்றி நீர் இறைக்கச் செய்த தெனாலிராமனின் அறிவை மனத்திற்குள் எண்ணி வியந்தனர். மேலும் அங்கே இருந்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தனர் திருடர்கள். 

Monday, 12 August 2013

தெனாலி ராமன் நீதிக் கதைகள் - குட்டி போட்ட பாத்திரங்கள்

விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இதனால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர்.

இதையறிந்த தெனாலிராமன் அந்த சேட்டை நயவஞ்சகமாக திருத்த திட்டம் தீட்டினான்.

அந்த சேட் பாத்திரங்களையும் வாடகைக்கு விடுவதுண்டு. ஒரு நாள் தெனாலிராமன் சேட்டைச் சந்தித்து "தன் மகனுக்குக் காதணி விழா நடைபெறுவதாகவும் அதற்குச் சில பாத்திரங்கள் வாடகைக்கு வேண்டுமென்றும் விழா முடிந்ததும் கொண்டு வந்து தருவதாகவும்" கூறினான்.

அதன்படியே சேட்டும் பாத்திரங்களை தெனாலிராமனுக்குக் கொடுத்தான். சில நாள் கழித்து தெனாலிராமன் அந்தப் பாத்திரங்களோடு சில சிறிய பாத்திரங்களையும் சேர்த்துக் கொடுத்தான்.

இதைப் பார்த்த சேட் "நான் பெரிய பாத்திரங்கள் மட்டும் தானே கொடுத்தேன். சிறிய பாத்திரங்களை நான் கொடுக்கவில்லையே......... அவற்றையும் ஏன் கொடுக்கிறாய்" என்று கேட்டான்.

அதற்குத் தெனாலிராமன் "உமது பாத்திரங்கள் "குட்டி" போட்டன. அவற்றையும் உம்மிடம் கொடுப்பது தானே முறை. ஆகையால் தான் அவற்றையும் சேர்த்து எடுத்து வந்தேன்" என்றான்.

இவன் சரியான வடிகட்டியான முட்டாளாக இருப்பான் போல என்று எண்ணி "ஆமாம் ஆமாம். இவற்றை நான் உன்னிடம் கொடுக்கும் போது சினையாக இருந்தன. ஆகையால் தான் குட்டி போட்டுள்ளன" என்று அனைத்துப் பாத்திரங்களையும் பெற்றுக் கொண்டான். சில மாதங்கள் கழித்து "தன் வீட்டில் விசேடம் நடைபெற இருப்பதாகவும் அதற்கு மன்னரும் அரசுப் பிரதானிகளும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப்பாத்திரங்களும் வேண்டும்" என்று கேட்டான்.

இவனுடைய நாணயத்தை அறிந்த சேட் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களைக் கொடுக்க சம்மதித்தான். கொடுக்கும் போது இவை கர்ப்பமாக இருக்கின்றன. விரைவில் குட்டிபோடும். இவற்றின் குட்டிகளையும் சேர்த்துக் கொண்டு வா என்றான்.

"சரி" என்று ஒப்புக் கொண்டு தங்க வெள்ளிப் பாத்திரங்களைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். சில மாதங்கள் ஆயின. பாத்திரங்கள் திரும்ப வருவதாகக் காணோம்.

ஆகையால் சேட் நேரே தெனாலிராமன் வீட்டுக்குச் சென்றான். தெனாலிராமனைச் சந்தித்து "இவ்வளவு நாட்களாகியும் ஏன் பாத்திரங்களைத் திரும்ப கொண்டு வந்து தரவில்லை" என மிகக் கோபமாக கேட்டான்.

அதற்கு தெனாலிராமன் "சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று தான் தங்களைப் பார்க்க வரவில்லை. பாத்திரங்கள் கர்ப்பமாக இருந்தனவா.........பிரசவம் கஷ்ட்மாக இருந்தது அதனால் அனைத்துப் பாத்திரங்களும இறந்து விட்டன" எனத் தெரிவித்தான்.

இதைக் கேட்ட சேட் "யாரிடம் விளையாடுகிறாய்? பாத்திரங்கள் சாகுமா?" எனக் மிகக் கோபமாகக் கேட்டான். அதற்குத் தெனாலிராமன் "பாத்திரங்கள் குட்டி போடும் போது அவை ஏன் இறக்காது" என்று கேட்டான்.

"என்னுடன் வா மன்னரிடம் முறையிடுவோம் அவரின் தீர்ப்புப்படியே நடந்து கொள்வோம்" என்றதும்

வேக, வேகமாக அவ்விடத்தை விட்டு நகன்றான் சேட்.

இருப்பினும் தெனாலிராமன் அவனை விடாது மன்னரிடம் இழுத்துச் சென்று மக்களிடம் அநியாய வட்டி வாங்குவது பற்றி முறையிட்டான்.

எல்லா விவரங்களையும் கேட்டறிந்த மன்னர் "பாத்திரங்கள் குட்டி போடும் என்றால் அவை பிரசவத்தின் போது ஏன் இறக்கக் கூடாது? உன் பேராசைக்கு இது ஒரு பெரு நஷ்டமே ஆகையால் இனிமேலாவது மக்களிடத்தில் நியாயமான வட்டி வாங்கு" என புத்திமதி கூறி அவனை அனுப்பி வைத்தார் மன்னர்.

தெனாலிராமனின் புத்திசாலித் தனத்தை மன்னர் மனமாரப் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

தெனாலி ராமன் நீதிக் கதைகள் - குதிரை விலை



ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

வைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக்கொடுக்கும் சேட்டை அணுகினான். அதற்கு சேட்டும் "பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்" என்று கேட்டார்.


தெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் சேட்டும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தான்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் வைத்தியரிடம் சென்று சிகிச்சையை ஆரம்பித்தான். விரைவில் குணமும் அடைந்தான்.

பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. ஆகையால் சேட் தெனாலிராமனை சந்திக்கப் புறப்பட்டான்.

தெனாலிராமனைப் பார்த்து "என்னப்பா, உடல் குணமானதும் குதிரையை விற்றுப்பணம் தருவதாக சொன்னாயே. இன்னும் தரவில்லையே உடனே கொடு என்றான். தெனாலிராமனும் நன்கு யோசித்தான். அநியாய வட்டி வாங்கும்  சேட்டுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினான்.

"சரி குதிரையை விற்றுப் பணம் தருகிறேன். என்னுடன் நீயும் வா" என்று அவனையும் அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரில் நடக்கும் சந்தைக்குப் புறப்பட்டனர்.

போகும் போது குதிரையையும் கூடவே ஒரு பூனையையும் அழைத்துச் சென்றான்.

சந்தையில் தெனாலிராமனின் பளபளப்பான குதிரையைப் பார்க்க பெரிய கூட்டமே கூடி விட்டது. அப்போது ஒரு பணக்காரன் தெனாலிராமனைப் பார்த்து "உன் குதிரை என்ன விலை" என்று கேட்டான்.

அதற்கு தெனாலிராமனோ "குதிரையின் விலை 1 பவுன்தான். இந்த பூனையின் விலையோ 500 பவுன். ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால்தான் இக்குதிரையைக் கொடுப்பேன்" என்றான்.

தெனாலிராமனின் பேச்சு அவனுக்கு விநோதமாக இருந்தாலும் குதிரையை வாங்க வேண்டும் என்ற மிகுந்த ஆவலில் 501 பவுன் கொடுத்து குதிரையையும் பூனையையும் வாங்கிச் சென்றான்.

பின் சேட்டிடம் ஒரு பவுனை மட்டும் கொடுத்தான். ஆனால் ஒரு பவுனை சேட் வாங்க மறுத்து விட்டான். "குதிரை அதிக விலைக்குப் போகுமென்று நினைத்து தானே உனக்குப் பணம் கொடுத்தேன். நீ இப்படி ஏமாற்றுகிறாயே" என்றான்.

அதற்கு தெனாலிராமன் "ஐயா சேட்டே குதிரையை விற்றுத்தான் உமக்குப்பணம் தருகிறேன் என்று சொன்னேன். அதன்படியே குதிரையை 1 பவுனுக்கு விற்று அந்த 1 பவுனையும் உனக்கே கொடுத்து விட்டேன். நீ வாங்க மாட்டேன் என்கிறாயே............ இது என்ன நியாயம்" என்றான்.

சேட்டோ 500 பவுன் வேண்டுமென்றான். இறுதியில் இவர்கள் வழக்கு மன்னர் கிருஷ்ண தேவராயரிடம் சென்றது.

மன்னர் இவ்வாழ்க்கை ஆதியோடு அந்தமாக விசாரித்தார். பின் தெனாலிராமன் செய்தது சரியே என்று தீர்ப்புக் கூறினார். 

தந்திரம்

ஒரு காட்டில் சிங்கம் ஒற்று வாழ்ந்து வந்தது. அது மிகவும் பலசாலியானதால் கர்வத்துடனும் வாழ்ந்து வந்தது. அது கண்ணில் தென்படும் அனைத்து மிருகங்களையும் உணவுக்காகவும் விளையாட்டுக்காகவும் வேட்டையாடி விடும். 

காட்டில் உள்ள எல்லா மிருகங்களும் மிகவும் கவலை அடைந்ததது. அனைத்தும் சேர்ந்து ஒரு கூட்டம் போட்டு சிங்கத்திடம் பேசவேண்டும் என் தீர்மானம் போட்டது. 

சிங்கத்திடம் எல்லா மிருகங்களும் சென்றன. நீங்கள் எல்லா மிருகங்களையும் கொள்வது சரியான நியதி கிடையாது. எனவே நங்கள் ஒரு முடிவெடுத்து உள்ளோம். நீங்கள் யாரையும் இனி வேட்டையடக்கூடாது, நாங்களே தினமும் ஒருவரை அனுப்பி வைப்போம் என் கூறியது.

சிங்கமும் சரி எனக்  கூறியது.

தினமும் ஒவ்வொரு மிருகமாக சிங்கத்திற்கு உணவாக சென்றது. அன்று முயலின் முறை அது உணவாக சிங்கத்திடம் செல்லவேண்டும். மிகுந்த கவலையுடன் சென்று கொன்றுக்கும் பொது ஒரு கிணற்றை பார்த்தது. ஒரு முடிவுக்கு வந்த முயல் பிறகு கொஞ்சம் நேரம் விளையாடி விட்டு சிங்கராஜாவிடம் சென்றது.

சிங்கராஜாவே என்னை மன்னியுங்கள். நான் தாமதமாக வந்துவிட்டேன் என தலைதாழ்த்தி நின்றது.

சிங்கமும் காரணம் கேட்டது, அதற்கு முயல் "சிங்கராஜவே நான் வரும் 
வழியில் ஒரு சிங்கத்தை பார்த்தேன் அது என்னை எங்கு செல்கிறாய் என் கேட்டது. நான் சொன்னேன் எங்கள் சிங்க ராஜாவுக்கு உணவாக செல்கிறேன் என்று" 

அதற்கு அந்த சிங்கமோ, இந்த காட்டில் நான் மட்டுமே ராஜா வேறு யாரும் இல்லை,  இங்கு இருக்கும் எல்லா மிருகமும் எனக்கே சொந்தம் என்றது " என கூறியது 

இதனை கேட்ட சிங்கராஜவுக்கு மிகுந்த கோபம் வந்தது முயலுடன் அந்த சிங்கத்தை காண சென்றது 

முயலும் அந்த கிணற்றை காட்டியது, சிங்கம் அதனை எட்டி பார்க்க அதன் உருவம் உள்ளே தெரிய, அது நம் உருவம் என அதுக்கு தெரியாமல் கர்ஜித்தது, கர்ஜனை எதிரொலித்ததும் சிங்கம் கிணற்றுக்குள் பாய்ந்தது,

முயலின் புத்திசாலித்தனம் நிறைவேறியது.

Sunday, 11 August 2013

மனம் தளராதே

மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

 அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை 

தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு 

ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு 

கதையை தன் சீடர்களுக்கு சொன்னார். 

அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச்

 சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. 

அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று 

நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது

 ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது" 

என்று கூறினார். 

பின் அவர்களிடம், "அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும்

 பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று கூறினார். மேலும் அந்த சிறு 

எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும்

 எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று 

கூறி, அன்றைய பாடத்தை முடித்தார். 

Saturday, 10 August 2013

விடா முயற்சி

போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி

ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் 

சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் 

மாபெரும் படை இருந்ததினால் வெற்றி  பெற்றான்.  வெற்றி பெற்ற எதிரி 

அரசனை கொல்ல திட்டமிட்டான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்று

 அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள்

 ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் 

கவனத்தைக் ஈர்த்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் 

கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் 

போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் 

மறுபடி மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி 

முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் 

முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்? என யோசித்தான் 

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று 

எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் 

தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் 

சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை 

உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் 

போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். 

தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை. 

பலவீனமே பலம்

சிறுவன் ஒருவன் ஜூடோ பயில விரும்பினான். அவனுக்கோ ஒரு விபத்தினால் இடது கை போய்விட்டது. எனினும் இந்தக் குறையைப் பொருட்படுத்தாமல், குரு ஒருவர் அவனுக்குப் பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டார்.
தினமும் பயிற்சி அளித்தார் குரு. ஆனால் ஒரே ஒரு குத்து வித்தை தான் சொல்லிக் கொடுத்தார். நான்கைந்து மாதங்கள் சென்றன. அப்போதும் அதே பயிற்சிதான். சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டான்.
ஒரு நாள் சிறுவன் குருவைக் கேட்டே விட்டான். “இந்த ஒரு குத்து போதும் உனக்கு” என்று சொல்லிவிட்டார். நாட்கள் கடந்தன. குரு சிறுவனைப் போட்டிக்கு அனுப்பினார். ஒரு கையுடன் வந்த சிறுவனைப் பார்த்து பலரும் அற்பமாய் எண்ணினர். ஆனால் … நீங்கள் நினைத்தது சரிதான். வெற்றி சிறுவனுக்கே. தன்னை விட பலசாலிகளை எல்லாம் ஆக்ரோஷமாய் எதிர் கொண்டு வீழ்த்தி விட்டான். எல்லோருக்கும் ஆச்சர்யம். சிறுவனுக்கும்.
”எப்படி குருவே என்னால் ஒருகையை வைத்துக் கொண்டு, ஒரே ஒரு குத்துப் பயிற்சியை மட்டும் கற்று வெற்றி பெற முடிந்தது?” என்று கேட்டான்.
குரு சொன்னார்: “ இரண்டே காரணங்கள் தான். ஒன்று, நீ பயிற்சி செய்தது ஜூடோவிலேயே மிகவும் கடினமான குத்து. இரண்டு, இந்தக் குத்தை தடுக்க வேண்டும் என்றால் குத்துபவனின் இடது கையை மடக்க வேண்டும். உன்னிடம் அது இல்லை”
குருவுக்கு ஆத்மார்த்தமாக நன்றி சொன்னான் சிறுவன்.